Friday, November 21, 2003

Ekalaivan pEsukirEn

ஏகலைவன் பேசுகிறேன்
-------------------------------

நம்பி தொழுது வந்தேன் குருவே
உம்மிடம் நற்கல்வி பயின்றிடவே
பாவியடா நீ உனக்கு இந்தப்
பாடங்கள் எதெற்கென்றீர்

உன் கை சிலை செய் அற்புதங்கள் என்னுள்
புதுக் கனலை தூண்டிடவே
சிலையாய் உமை வடித்தேன் - அதில்
சிலை கலைகள் பல அறிய பெற்றேன்

வனம் வந்த மிருகத்தின் வாயை என்
சரம் கொண்டு தைத்து வைத்தேன்
அது உமதென்று அறியாமல் அதில்
எழுந்த காண்டீபன் கனல் தெரியாமல்

கொல்லுதல் என் குலதர்மம் குருவே! நீதி
சொல்லுதல் உமது குலதர்மம்
வனம் திரியும் வேடன் நான் - நடிக்கும்
குரு வடிவில் வேடன் நீர்..

வந்தீரய்யா சோதிக்க என் குருவன்பை
அன்றே நீர் பாதித்தீர் உம் குலப்பண்பை
சேதித்தேன் கையை பெருவிரல் துணித்து
சாதித்தேன் பொன்னுலகில் என் பெயர் பதித்து

உன் கண்ணில் தெரிந்தது எக்களிப்பு- உன்
பிரியன் கண்ணில் தெரிந்தது வெற்றி களிப்பு
என் கண்ணில் வலி தந்த உயிர் துடிப்பு - எனை வளர்த்த
சிலை கண்ணில் நான் கண்டேன் நீர் துளிர்ப்பு

- ஐயப்பன்

No comments: