Monday, December 20, 2004

kaathOdu thaan naan pEsuvEn - 1

காவியங்கள் என்றதும் முதலில் எல்லோருக்கும் நினைவில் வருவது இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இரு பெரும் இந்தியக்காவியங்கள். இந்தக்காவியங்கள் எல்லோருக்கும் எந்த வயதினருக்கும் ஏற்றவாறு அமைந்திருப்பது இதன் வலிமை. ஒரு சிறுவன் படிக்கையில் அது ஒரு ஆக்ஷன் கதை. வாலிபன் படிக்கையில் காதல் கதை. ஒரு வயதானவன் படிக்கையில் அது தத்துவம்- வாழ்க்கையைப் பற்றிய பரிபூர்ண தத்துவமாய் நிற்கிறது. எந்தக்காலத்திற்கும் ஏற்றதாய் நிலைத்து நிற்கிறது.

சரி ஆனால் இந்த இதிகாசங்கள் இன்றைய நிலையில் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது? நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்து படிக்கிறோம்? எத்தனை பேர் இதற்கு மதிப்புக் கொடுக்கிறார்கள்? இதில் நம்முடைய நிலை என்ன?

நம்மிடம் இப்போதெல்லாம் பரவலான ஒரு வழக்கம்! எதையும் அதைப் படித்து தெரிந்து அதனை உணர்வதை விட, எனக்கு தெரிந்த புராணம் இவ்வளவு தான்... இதை வைத்து நான் சொல்லுகிறேன் உங்கள் புராணங்கள் அத்தனையும் தவறு என்கிற வகையில் செல்கிறது. அல்லது என் புராணம் போல உண்டா என சொந்தப் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறோம்.

மஹாபாரதத்தில், இராமாயணத்தில் கிளைக் கதைகள் பல உண்டு. அவற்றையும் தாண்டி செவி வழிக்கதைகள் பல உலவுவதும் உண்டு. உதாரணத்துக்கு மயில் இராவணன் கதை, சில நாட்களுக்கு முன்னால் நம் தமிழக முதல்வரால் பிரபலமான தவளை கதை, மின்னல் கொடி- அர்ஜுனன் கதை, பாஞ்சாலி கர்ணனின் மேல் ஆசைப்பட்டதாகச் சொல்லப்படும் கதை என பல நீள்கிறது. பாஞ்சாலி தன் மனதில் கர்ணனைப் பற்றி ஆசைப்பட்டதாகவும் அது ஒரு நேரத்தில் கண்ணனால் வெளிக்கொண்டு வரப்பட்டதாகவும் கதை சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் இது போன்ற கதைகள் பாரதத்தில் உண்டா? நான் படித்தவரை, படித்த அன்பர்களிடம் கேட்டவரை இவைகள் மூலப் புத்தகத்தில் இல்லை. இதைச் சொல்லிப்பாருங்கள், பெரும்பாலானோர் தரும் பதில், இவையெல்லாம் செவிவழி செய்திகள். கர்ணபரம்பரைக் கதைகள் அதனால் உண்மை இல்லாமல் இருக்காது... என்கிற ரீதியில் பதில் வரும். அதாவது நெருப்பில்லாமல் புகையாது என்பது இவர்கள் கூற்று... பனி நீரிலிருந்தும் ஆவி வரும் என்பதை மறந்தவர்கள் அல்லது மறுப்பவர்கள் நாம் அல்லது நம்மில் பெரும்பாலோர்.

சரி இந்தச் செவிவழி செய்திக்கு வருவோம். (கர்ணப்பரம்பரை என்பதன் அர்த்தம் கர்ண= செவி; பரம்பரை= வழிவழியாக சொல்லப்பட்ட கதை). பல பழமொழிகள் இன்றும் சொல்லப்படுவது, செவிவழியாக சொல்லப்பட்டு வருபவை தான். அதை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் பிரச்சினை. உதாரணத்துக்கு சில பழமொழிகள்.

ஆயிரம் முறை பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்யலாம் என்பது பழமொழி (இன்றைய வழக்கில்). நம் முன்னோர்கள் இதை சொல்லி இருப்பார்களா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பொய் சொன்னது தெரிந்தாலே பல கல்யாணம் நின்று போகிறது. அப்படி பொய் சொல்லி செய்த கல்யாணத்தில் பின்னால் சிரமங்களை அனுபவிக்க போவது பிள்ளைகள் தானே... திட்டும் போதே எங்கே தவறாகத் திட்டினால் அது பலித்து மகனுக்கு/மகளுக்கு தீங்கு நேரிடுமோ என பயந்து "நாசமத்து போக (நாசம் அற்று போக)" என்று திட்டும் நம் பெரியவர்க்ள் தன் மக்களுக்கு உபவாதம் செய்யும் வகையில் பொய் சொல்லிக் கல்யாணம் செய்வார்களா?

உண்மையில் இந்தப்பழமொழி என்ன? என் தாத்தா சொல்லுவார்.. அந்தக்காலத்தில் ஒரு கல்யாணம் ஆகவேண்டும் என்றால் பத்து செருப்பு தேயும் என்று... அத்தனை நடந்து போய் உறவினர்களை அழைத்து அனைவரின் ஆசியுடன் செய் என்பதை "ஆயிரம் முறை போய்ச் சொல்லியாவது ஒரு கல்யாணம்" என்றால் நாம் அதை தவறாகத் தெரிந்துகொண்டு அதன் பழியை பெரியவர்கள் மேல் போட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

இது போலவே சில பழமொழிகள் தவறாகவே அர்த்தம் கொள்ளப்பட்டு தவறாகவே வழக்கத்தில் உள்ளது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே, ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என பட்டியல் நீள்கிறது.

2 comments:

Anonymous said...

நல்லா இருக்கு ஐயப்பன்....

posted by: ரவி

ரவி said...

உமது தலைப்புகள் ஏன் ஆங்கிலத்தில் உள்ளன ???