Monday, December 20, 2004

kaathOdu thaan naan pEsuvEn - 2

சரி பழமொழியை விடுங்கள், அது செவி வழியாக வந்ததால் அப்படி இப்படி திரிந்து போயிற்று என சொல்லலாம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை எப்படி எடுத்து கொள்கிறோம் என்று பாருங்கள்.

"தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று"

படித்த பலரும், தந்த அர்த்தம் கொஞ்சம் ஒத்துக்கொள்ள முடியாததாகவே இருந்தது, கலைஞரின் உரை படிக்கும் வரை. பிறக்கும் போதே புகழோடு பிறக்கணும் இல்லாட்டா, பிறப்பதே வேண்டாம் அப்படிங்கற மாதிரி தான் பள்ளிக்கூடத்திலும் சொன்னாங்க. அதெப்படி பிறக்கும் போதே புகழைத் தேடிக் கொண்டு பிறக்கும் உரிமை நமக்கு உள்ளதா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவர், இப்படிச் சொல்லி இருப்பாரா??

இதை இப்படி அர்த்தம் எடுத்துக் கொண்டு பாருங்கள்

கலைஞர் தன் உரையில் சொல்கிறார்: மக்கள் நிறைந்த சபையில் கற்றவர் நிறைந்த சபையில்... தோன்றுவீரேல் புகழொடு தோன்றுக... இல்லையேல் தோன்றாமை நன்று... இது ஒத்துப் போகிறது அல்லவா?

இதே போல இன்னொரு குறள் உண்டு.

"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு."

வருவிருந்திலேயே செல்விருந்து அடங்கி விடுகிறது. வந்தவர்கள் போகாமல் இருந்தால் அப்புறம் அவர்கள் விருந்தினர்கள் இல்லை. அப்புறம் என்ன செல்விருந்தோம்பி? வருவிருந்து? அதிகமாக இரண்டு வார்த்தை உபயோகிக்க கூடாதென்பதற்காகவே எல்லாவற்றையும் ஒன்றரை வரிகளில் திணித்து அற்புதமான வெண்பாக்களை தந்த தெய்வப் புலவர், எதற்காக இப்படி சொன்னார்.. இதன் உண்மை அர்த்தம் என்ன சிந்தித்துப் பாருங்கள்..

அந்தக் காலத்தில் பலப் பெரியோர்கள் உஞ்சவிருத்தி மேற்கொண்டு இருப்பார்கள். இதுவும் தவறாகப் பிட்சை எடுப்பது என்று அர்த்தம் கொள்ளப்பட்டு வருகிறது. உஞ்சம்= பொறுக்குவது. அதாவது அறுத்த வயலில் உதிர்ந்த நெல் மணிகளைப் பொறுக்கி அதில் உயிர் வாழ்வது. இந்த வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தவர் குசேலர். அடுத்தவகை இதற்கும் சற்று மேலானது. கபோத விருத்தி. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாமலா போய் விடுவான் (அட தப்பா நினைக்காதிங்க.. இது குடிக்கிற தண்ணி தான், அடிக்கிற தண்ணி இல்லை) என்று வாழ்வது. நாளை தேவை என்று எதையும் சேமித்து வைக்காதிருப்பது.

இதை அடுத்த நிலை அகர விருத்தி எனப்படுவது. அதாவது மலைப்பாம்பு போல் அதிகம் உணவுக்கு என்று நகர்ந்து போகாமல் தன்னை நாடி வரும் உணவை உண்பது. இந்த வகை சார்ந்த பெரியோர்கள் அவர்கள் விருப்பம் போல் பல இடங்களுக்கு யாத்திரையாய் சென்று கொண்டே இருப்பார்கள். உணவு வேண்டும் என்று யாரிடமும் யாசிப்பவர்கள் இல்லை இவர்கள். நம்மை தேடி வராமல் அவர்கள் விருப்பம் போல் சென்று கொண்டே இருப்பவர்கள். இந்த வகையில் வாழ்ந்தவர் பட்டினத்தார்.

"வாசல் தாண்டி வாராப் பிச்சைக்கு இங்கு ஆசைப்படுவதில்லை அய்யனே" என்கிறார் பட்டினத்தார். இவர்களைத்தான் செல்விருந்து என வள்ளுவர் குறிப்பிட்டார் என்பது வாரியார் கருத்து.

No comments: