Monday, December 20, 2004

kaathOdu thaan naan pEsuvEn - 4

நமது இதிகாசங்கள் இரத்தமயமானவை, அவை யுத்தத்தால் தான் அமைதியை நிலை நாட்டியது, ஆக அது ஹிம்சையைப் போதிக்கிறது என்று பலரும் நம்மில் வாதிக்க வரலாம். தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் என்கிறது மனு நீதி. பாண்டவர்கள் அனுபவிக்காத துயரில்லை. அவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்த போதும் ஒதுங்கிச் சென்றார்கள். இதற்கும் மேல் பொறுமை இல்லை என்ற நிலையில் எழுந்தது போர். பல மக்களும் போற்றும் கீதை.... அது எழுந்தது அந்தப் போர்க்களத்தில். கீதையில் சொல்லாத மனித தருமங்கள் இல்லை.

தன் படைகளைத் திரட்டிச் சென்று ஏறக்குறைய வெற்றி என்ற நிலை வந்தபின்னும், இராமன் சொல்கிறான்.. "இப்போதும் கெட்டுப் போகவில்லை... என் மனைவியைத் திருப்பித் தா... போர் வேண்டாம்" என்கிறான்... எதிர் நிற்பவன் தன் மனைவியைக் கவர்ந்த படுபாவி.. ஆனால் ஆயுதம் இழந்து நிற்கிறான்... அப்போது இராமன் சொல்லுவது... இன்று போய் நாளை வா என்று.....

இராமனுக்கு இளைத்தவளில்லை நான் என்று சீதையும் பல இடங்களில் நிரூபிக்கிறாள். உதாரணத்துக்கு அசோக வனம்... தன்னைக் கவர்ந்து தூக்கி வந்தவன் இருக்கும் இடம்... அது மட்டுமா.... சுற்றிலும் அரக்கர் கூட்டம்.... அனுமனின் செயலால் இலங்கை தீப்பற்றி எரிகிறது... நம்ம வீட்டு ஆளா இருந்தா... இன்னும் பத்து கேன் பெட்ரோல் வாங்கி தாரேன்... எல்லா வீட்டையும் நல்லா பத்த வைய்யின்னு... ஆனால் சீதை சொல்கிறாள், 'அக்கினியே! நல்லவர், முதியவர், பெண்டிர், குழந்தைகளை வாட்டாதே" என்று.

சரி அதையெல்லாம் விட்டுவிடலாம்... இத்தனை தீமைகள் செய்த துரியன் அவன் குணத்தை எல்லாவிடத்திலும் தாழ்த்தவில்லை.... அவனும் நல்ல குணங்கள் உடையவன் தான் என்று பல இடத்தில் எடுத்துவைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு எடுக்கவோ கோர்க்கவோ....

வில்லிபுத்தூரார் எழுதிய அந்த பாரதத்தில் இது அற்புதமான வார்த்தை. இரண்டே வார்த்தை தான் அது தரும் அர்த்தம் அப்பப்பா... காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்...

கர்ணன் முன்பாக துரியன் மனைவி. இருவரும் சொக்கட்டான் ஆடுகிறார்கள். கர்ணனுக்கு கை ஓங்கி இருக்கிறது ஆட்டத்தில்... அந்த நேரம்... கர்ணனின் பின்னால் இருந்த பக்கமாய் துரியன் வருகிறான். அதைக் கண்ட பானுமதி எழ முயல... அதை அறியாத கர்ணன் அவள் ஆட்டத்தில் தோற்பதால் விலகுவதாய் நினைத்து... எங்கே போகிறாய் என்று அவளை இழுத்து உட்கார வைக்க முயல... அவன் கை அவள் இடையில் இருக்கும் மணி மேகலையில் பட்டு முத்து அறுந்து கூடம் எங்கும் சிதறுகிறது. அப்புறம் தான் பின்னால் வந்த நண்பனைக் கவனிக்கிறான்....

இப்போது இருவரின் நிலை பரிதாபம்... நிற்பவன் அரசன்... அடைக்கலம் தந்து வாழ்வித்தவன்... அவன் முன்னால் அவன் மனைவி மடி பிடித்து இழுத்து மேகலை அறுந்து போகுமாறு செய்தவனை மன்னிப்பானா என்று கர்ணனும், என்ன சொல்லுவானோ கணவன் என்ற அச்சத்தில் பானுமதியும் நிற்க... துரியன் சொல்கிறான்... கர்ணா... எடுக்கவா கோர்க்கவா என்று..... அதில் பொதிந்த அர்த்தம் தான் என்ன.... சிதறிய முத்துக்களை எடுக்க நிதானம் வேண்டும். கோபம் கொண்ட மனதில் நிதானம் வராது. எடுக்கும் போதே முத்து வழுக்கும், அதனால் கோபம் அதிகமாகும்... கோபத்தை வெகுவாக அடக்கி அதை எடுத்தப் பின்னாலும் மனதில் சற்றேனும் சலனம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால்... எடுத்த அந்த முத்தைக் கோர்ப்பேன்... சலனமடைந்த மனதால் அந்த நுண்ணிய செயல் செய்ய இயலாது... நண்பனே... என் சகியே... சொல்லுங்கள் எடுக்கட்டுமா கோர்க்கட்டுமா என்று. இருவரும் தீயவர்கள் தான்... ஆனாலும் அவர்களிடையே இருந்த நற்பண்புகளையும் எடுத்துக் காட்டியது. ஒரு சிறந்த நட்புக்கு பரிணாமம் காட்டியது.. மஹாபாரதம்.

1 comment:

Anonymous said...

என்னய்யா இது பாதில நிறுத்தி வச்சிருக்க ?? முழுசா போடமாட்டீங்களோ ??.. இது வரைக்கும் நல்லா தான் இருக்குது மிச்சத்தையும் போடுமையா

posted by: puthiyavan