இராமாயணத்தில் எழும் இன்னொரு கேள்வி... வாலி வதம் சரியானதா... இராமன் மறைந்து இருந்து கொன்றது சரியா... அப்படியானால் இராமன் எந்த வகையில் வீரன் என்று போற்றப் படுவான் என்பது. இந்தக்கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. பெரியவர்கள் துணையுடன் ஆராய்ந்து உணர முயன்ற கருத்து
சுக்கிரீவன் வாலியால் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அஞ்சி வாலி புகமுடியாத இடத்தில் இருக்கிறான்.. அப்படி வாலி கோபம் கொள்ள சுக்ரீவன் என்ன செய்தான்... வாலி துந்துபியுடன் சண்டையிட்டுகொண்டு குகைக்குள் சென்று பல நாட்கள் வெளிவரவில்லை. குகையில் இருந்து இரத்தஆறு மட்டும் வருகிறது... அதைக் கண்ட மந்திரிகளும் சேனைத்தலைவர்களும் வாலி இறந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இந்த நிலையில் சுக்ரீவன் நான் சென்று என் அண்ணனை மாய்த்த பாவியை வதைப்பேன் அன்றில் அவன் சென்ற இடம் செல்வேன் என்கிறான். பின் அனைவரின் வற்புறுத்தலால் அரசாட்சி ஏற்று சிறப்பாகவே அரசாள்கிறான். வாலி துந்துபியைக் கொன்று வெளியே வந்து பார்க்கையில் அரசு பீடத்தில் இளவல்... வாலிக்கு வாலுக்கு மேல் கோபம் வருகிறது. சுக்ரீவன்... நடந்ததை எடுத்துச் சொல்லி இந்த நாடு இந்த பதவி எல்லாம் உனது நான் உன் அடைக்கலம் என்று நின்றவனை... போருக்கு அழைக்கிறான்.. அப்போதும் தம்பி சொல்கிறான்.... நான் தோற்றவனாகிறேன்... என்னை விட்டுவிடு என்று... உண்மை இதுவென அறிந்தும் வாலி தம்பியைக் கொல்ல வருகிறான்...
ஆக அடைக்கலம் என்று எதிரியே புகுந்தாலும் அவனைக் காப்பது அரசதர்மம், அதைத் தவறியது வாலியின் குற்றம். அடுத்து தன் மேல் தவறற்ற ஒருவனுக்குத் தண்டனை தர முற்பட்டது அடுத்த குற்றம்.
காட்டில் இராமன் சுக்ரீவனைப் பார்க்கிறான்...
விருந்தும் ஆகிஅம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா
பொருந்து நன்மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.
அதாவது என்ன நீ கூட தனியனா? என் சாதி தானா நீ?... உன் மனைவியைக் கூட பிறன் கவர்ந்து சென்றானா?... வலிமை கொண்டவன் செய்ததினால் வழியின்றி தவிக்கிறாய்... வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி... பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி.. இதோ நான் இருக்கிறேன் சுக்கிரீவா, உனக்கு வாழ வழி சொல்கிறேன்.. புதியதோர் உலகம் செய்வோம், உனது எதிரி இனிமேல் எனது எதிரி என ஆறுதல் தந்து அடைக்கலம் தந்தான்.
ஆக கொடுத்த வாக்கு காக்கப்படவேண்டும்.. அந்த வாக்குப்படி வாலிவதம் நிகழ்ந்தாகவே வேண்டும்.
வாலி கேட்கிறான்... அறம் அறிந்த இராமா... அரச குலத்தில் பிறந்த நீ மறைந்து நின்று கொல்லலாமா.... என்கிறான்.... உன் செய்கையைக் கண்டு நான் நாணுகிறேன் என்கிறான்.... கேவலமாக இகழ்ந்து உரைக்கிறான்.
இராமன், நீ தம்பியின் மனையைக் கவர்ந்தது சரியா என்று வாலியைக் கேட்க... அவன் சொல்கிறான்.... விலங்கினம் நாங்கள் எங்களுக்கேது வரைமுறைகள் என்று...
விலங்கினமாய் இருந்தும் இறப்பு காலத்திலும் தருமம் பேசும் இவன் அறியாத தருமமா?... இந்திரன் மகன் என்பதும் உண்டு. ஆக தருமம் தவறியவர் யாராகினும் தண்டனை என்பது நிச்சயம் உண்டு. ஆதிமூலமே என அழைத்து வைகுந்தம் சேர்ந்த அந்த ஆனை விலங்கல்ல.. இராவணன் எடுத்துச் சென்ற போது அவனை எதிர்த்துப் போராடி இறந்த அந்தப்பறவையும் விலங்கல்ல.... வாலி நீ அறம் முழுதும் அறிந்தும் அதைத் தவறியது... அனைத்திலும் பெரும் குற்றம் என்கிறான் இராமன்.
சரி எதுக்காக மறைந்து நின்று கொன்றாய் என்றால்..... சற்று யோசித்துப் பார்ப்போம்...ஒரு காலத்தில் இராவணனை வீழ்த்தியவன் தான் வாலி. ஆனாலும் அதன் பின் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது, உடன்பாடு ஏற்பட்டது... எதிரிக்கு நண்பன் தனக்கு எதிரி என்ற வகையில் வாலி அழிக்கப்படவேண்டியவன் தான். ஆனால் மறைந்து நிற்க வேண்டுவதன் காரணம்... இலக்குவன் சொல்லுகிறான்... அடேய் வாலி... எதிரில் நின்று போரிட்டு உன்னை அழிக்கத் தயக்கம் இல்லை.... ஆனால் என் அண்ணன் எதிர் நின்று போரிடும் நேரம்... நீயும் நான் உந்தன் அடைக்கலம் என்று புகுந்தால் உன்னைத் தண்டிக்க இயலாது. நீ செய்த குற்றங்கள் மன்னிக்கத் தகுந்தவை அல்ல.... என்கிறான்.
ஆக வாலி வதத்தில் ஏற்பட்டது தவறு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
4 comments:
இதில் இன்னொரு போர்க்கால யுக்தியும் அடங்கியுள்ளது. வாலிக்கு இந்திரன் கொடுத்த மாலைதான் அதற்குக் காரணம். அதை அணிந்த வாலியுடன் போரிட வரும் எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடும். பிறகு இருக்கவே இருக்கிறது வாலியின் சுய சக்தி. எடுத்த எடுப்பிலேயே கணித முறையில் எதிராளி பலவீனம் அடைந்து விடுகிறார். இது மனித அவதாரத்தில் இருக்கும் திருமாலுக்கும் பொருந்தும். இது ஒரு அழுகிணி வரம் அல்லவா? இதற்கு ஒரே மாற்று மறைந்திருந்துக் கொல்வதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
posted by: Dondu
சரியாக சொன்னீர்கள் டோன்டு. இன்னும் இங்கே சரக்குகளை எதிர்பார்க்கலாமா
posted by: Raman
வாலி இறக்கும் தருவாயில் கூறுவான்: "ராமா, நீ முதலிலேயே நேரில் என்னிடம் வந்திருந்தால் உன் பிரச்சினையை மிகச் சுலபமாகத் தீர்த்திருப்பேனே! நான் ஒரு வார்த்தை கூறியிருந்தால் ராவணன் கதறிக் கொண்டு சீதையை உன்னிடம் ஒப்படைத்திருப்பானே".
ஆனால் இதிலும் ஒரு சிக்கல். ராமன் நேரடியாக வாலியைச் சந்தித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிறன்மனைக் கவர்ந்த வாலி அதே குற்றம் செய்த ராவணனைக் கண்டித்திருக்க முடியுமா? அப்படியே நடந்திருந்தாலும் அதில் அவதாரக் காரியம் நடந்திருக்குமா?
இன்னொன்று. இப்போது இந்திரன் மாலைக்கே வருவோம். அதை பிற்காலத்தில் அணிந்துக் கொண்ட சுக்ரீவன் ராவணனுடன் துவந்த யுத்ததில் தோற்று ஓடவில்லையா? ஒரு வேளை இப்படியும் இருக்கலாம். அந்த மாலை வாலிக்கு மட்டும்தான் பயன் பட்டிருக்கும் போல.
எது எப்படியாயினும், வானரங்கள் தேவ அம்சம் உடையவர்கள். இந்திரன் அம்சம் வாலி, சூர்யன் அம்சம் சுக்ரீவன். ராமரின் அவதாரக் காரியத்துக்குத் துணை இருக்கவே அவர்கள் பூவுலகுக்கு வந்தனர்.
இதில் வாலி தான் வந்த நோக்கத்தை மறந்து விட்டான். கணினியில் கூறுவது போல இந்த கோப்பு கர்ரப்ட் ஆகிவிட்டது. அதை அழித்தால்தான் கணினி பாதுகாப்பாக இருக்க முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. Kindly change the background/font color. The present position is a strain on the eyes.
posted by: Dondu
டோண்டு அவகளுக்கு,
மிக அழகான விளக்கம். விளக்கங்களுக்கு மிக்க நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இன்னும் நிறைய எழுதுங்கள்.. படிக்க காத்திருக்கிறோம்.
அன்புடன்
ஐயப்பன்
posted by: iyappan
Post a Comment