யாரோ கதை சொன்னார்கள் நானும் கேட்டேன் அது உண்மையாகத்தான் இருக்கும் நீங்கள் எல்லாம் தான் பொய்யர்கள் என்ற வகையில் தான் நாம் இதிகாசங்களை எடுத்துக் கொள்கிறோம் என்று படுகிறது. அதாவது இப்போது பெரும்பாலோர் செய்யும் வழிபாடு போல....
வழிபாடு என்பது தன் மனம் கடவுளிடம் வைத்து முழுமையாக அதில் ஈடுபடுவது.. காலைல சில வீட்டு அம்மாக்கள் பூஜை பண்ணுவாங்க... சுப்ரபாதத்தோட ஆரம்பிக்கும்.... "கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா.. ஏண்டா... இன்னைக்கு இண்டர்வியூன்னியே இன்னும் தூங்கிட்டு இருக்கியே எழுந்திருடா முண்டம்... சந்தியா.... பிரவர்த்ததே... டீ சந்தியா, எழுந்து குழாய்ல தண்ணி பிடிக்கலாமில்லை.... தடி மாடு மாதிரி தூங்குறதைப் பாரு.... தடி மாடு தடி மாடு....உத்திஸ்ட நரசார்தூல....." எனப் போய்க்கொண்டு இருக்கும். இந்த வழிப்பாட்டை எதில் சேர்க்கலாம்... அது போலதான் நம்மில் பலரின் புரிந்துகொள்ளலும்.
கடமைக்காகத்தான் சொல்கிறேன்... அதில் மகிழ்ந்து பயன் தருவாய் ஆயின் நன்று... இல்லையேல் கடவுள் என்பது சுத்த வேஸ்ட்.. என்பது போல இருந்தால் அதில் என்ன பயன்?
இதிகாசங்களைப் பற்றிய நிறை/ குறை சொல்ல வருவீர்களா... அன்புடன் வரவேற்கப்படுவீர்கள். வரும் போது... கம்பராமயணம் பற்றி பேச விரும்புவோர்... அதைப் படித்தபின் பேசலாம்... வால்மீகியா சரி அதைப் படித்துவிட்டு வாருங்கள்.... பாரதமா ... சரி வியாசரோ அல்லது வில்லிபுத்தூரார் எழுதியதோ படித்துப் பார்த்துச் சொல்வதைத் தெரிந்துகொண்டு வாருங்கள். அட அதெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்ததைத் தான் நான் சொல்லுவேன் என்றால்... அது தான் சரி என்றால்...?
ஓசோ அவர்களின் முல்லா நசுருதீன் கதை நினைவுக்கு வருகிறது.. முல்லா நசுருதீன் ஒரு முறை மங்கலான விளக்கின் வெளிச்சத்தின் கீழ் எதையோ தேடிக் கொண்டு இருந்தாராம். அந்தப் பக்கம் ஒரு வழிப்போக்கன் கேட்டானாம்... என்ன தேடுகிறீர்கள் என்று. முல்லா சொன்னாராம்.. எனக்கு அற்புதமான விளக்கு ஒன்று கிடைத்தது. அந்த விளக்கு இருந்தால் போதும், அதை ஏற்றியதும் இந்தப் பகுதி முழுவதும் இருட்டு என்பதே இருக்காது.... ஆனால் அதைத் தொலைத்து விட்டேன் அதை தேடுகிறேன் என்றாராம்... அதற்கு அந்த வழிப் போக்கன் எங்கே தொலைத்தீர் எனக் கேக்க... முல்லா ஒரு இருட்டான பகுதியைக் காண்பித்து அங்கு என்று சொன்னாராம். அங்கே தொலைத்து விட்டு இங்கே எதற்கு தேடுகிறீர்கள் என்று கேட்டால் இங்கு தானே வெளிச்சமாக இருக்கிறது அதான் இங்கே தேடுகிறேன் என்றாராம்...
அதைப் போலத் தான் நாமும் இருக்கிறோம்... அற்புதமான விளக்கு நம்மிடம் இருக்கிறது. அதை முழுவதும் தொலைத்து விட்டு இல்லாத இடத்தில் தேடுவதில் பலன் இருக்காது....
நமது இதிகாசங்கள் ஒரு அற்புத தகவல் பெட்டகம். தருமம், நீதி, போதித்ததோடு நில்லாமல் அவை தவறப்பட்டால் என்ன விளைவு என்று காட்டுகிறது. வாழ்க்கைக்குச் சரியான பாதை காட்டுகிறது. திட்டமிடுதல், செயல்படுதல், ஆட்சி முறை இதெல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அற்புதமாகக் காட்டுகிறது.
இவை ஒரு ISO documents மாதிரி. அதில் இப்படி செய்தீர்களாயின் இந்த வகையான முடிவு என்று வரைமுறை விதித்து இருக்கும். எதை செய்து எந்த வழியில் சேரவேண்டும் என்பது படிப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும். சிலர் நான் அதெல்லாம் முடியாது... ஐ.எஸ்.ஓ என்பது நான் எப்படி நினைக்கிறேனோ அது போலத்தான் என்று இருந்தால்.... தர நிர்ணயத்தில் தவறவிடப்பட்டவர்களாகிறோம்.
No comments:
Post a Comment