Sunday, December 12, 2004

pathanjali yOgam - 04

யமம் -

2 - சத்தியம் :


சிலத் "தமிழ் புலவர்கள்" கிட்ட போய் கேட்டு பாத்தா அவங்க உடனே வாய் + மை = வாய்மை அதாவது உதட்டில் பூசப்படும் மை. உதட்டுச் சாயம்னு சொன்னாலும் சொல்லுவாங்க. பல சென்னை மக்களுக்கு சத்தியம் ஒரு திரையரங்கு மட்டும் தான். சரி அவங்க கிடக்கட்டும் இருங்க நாம வள்ளுவர் என்ன சொன்னாருங்கறத பாப்போம்.


இந்த வள்ளுவர் இருக்கார் பாருங்க அவருக்கு எப்பவுமே இப்படி தான் எதை சொன்னாலும் அதுக்கு ஒரு டெபனிஷன் போட்டு தந்துடரார். பாருங்களேன் சத்தியம்னா அதாவது வாய்மை என்னன்னு ஒரு அதிகாரம் முழுக்க சொல்லி இருக்காரு.


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

அப்ப பொய் சொல்லாம இருக்கிறது வாய்மையில்லையா ??ன்னு கேட்டா உடனே டக்குன்னு இன்னொரு போடு அடுத்து போட்டார்.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

( இப்ப எனக்கு ஒரு சந்தேகம் உண்மையும் வாய்மையும் வேற வேறயா ? அப்ப சத்தியம் அப்படிங்கறது உண்மையா இல்லை வாய்மையா ?? )



காந்தியடிகள் என்ன சொல்றார்னா உண்மையே கடவுள். கடவுளே உண்மை அப்படிங்கறார். நாம வேணும்னா பொய்யாமைன்னு வச்சுப்போம்

அதாவது தனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்ததாக மற்றவர்களிடம் சொல்லுவதும், அதன் மூலம் மற்றவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதும், தாமே கற்பித்துக் கொண்ட ஒன்றை இது தான் சரி என்று வாதிடுவதும் பொய்மையென சொல்லப் படுகிறது. தான் சொல்லும் பொய்யால் பலருக்கு நன்மை விளையுமேல் பொய்மையும் வாய்மையாகிறது. உடற்தூய்மையைக் காட்டினும் மனத்தூய்மை அதிகம் போற்றப்படுகிறது.

மொத்தத்தில் மனதாலும் நினைவாலும் ( இன்னும் ஒரு சந்தேகம் மனதும் நினைவும் வெவ்வேறயா ?? ) தூய்மை வேண்டும்.

தன்னெஞ்சறிய பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

3 - திருடாமை :

சரி வளன்னு பேசாம ( அதாவது நேரத்த திருடாம ) சொல்லிடறேன். மற்றவர்களின் அனுமதியின்றி எதை எடுத்தாலும் அது திருட்டு தான். திருட்டு அப்படிங்கறது மனதால் செய்தாலும் அது திருட்டு தான் அப்படின்னு வள்ளுவர் சொல்றார்


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்


பஸ்ல போறச்ச கண்டக்டர் கேக்கலைங்கறதுக்காக .. டிக்கட் வாங்காம போறது, அன்பளிப்பு அப்படிங்கற பேர்ல வாங்கறது இன்னும் பிற நியதிக்கு ஒவ்வாத பலவும் இதில் சேரும்.


ஆனா மனசு டூ மனசு திருடறாங்களே அவங்கள்ளாம் இதுல சேத்தியா தெரியாது.

அது சரி அதெதுக்கு அடிக்கடி மனதாலும் மனதாலும் நடு நடுல இழுத்து விட்டுடறாங்க ?


ஏற்கனவே சொன்னது தான். மனதல் நினைப்பது வாக்கிலும்.. வாக்கில் வருவது செயலிலும் முடிய வாய்ப்புகள் அதிகம். நம்ம ஆளுங்க தப்பா அர்த்தம் பண்ணிக்கறதுல பெரியாளுங்க. அதாவது அண்ணா சொன்னார். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்னு. நம்மாளு ஒருத்தர் அதை ரொம்ப சரியா புரிஞ்சுட்டு அடுத்து நாள் காலைல பூ மொட்டு எதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரன் செடிய காலி பண்ணிட்டார்...

இப்படியும் இருக்காங்க என்ன செய்ய

தொடரும்

No comments: