பதஞ்சலி யோகசூத்ரம் நாலு பாதங்கள்- சமாதி, சாதனா, விபூதி, கைவல்ய பாதம் என்றும் இவையனைத்தும் சேர்ந்து மொத்தம் எட்டுவகையான வழிமுறைகளில் சொல்லுகிறது. யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் கடைசியாக சமாதி. எந்த ஒரு மனிதன் இந்த எட்டு வகையிலும் தேர்ந்து விடுகிறானோ அவன் மிகப்பெரிய புண்ணியவான்.. பாக்கியசாலி.. ஒரு மஹான் என்று போற்றப்படுவார்கள். இதை ராஜயோகம் என்றும் அழைப்பார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இதெல்லாம் எழுத தகுதியானவனா நான் என்பதே தெரியாத நிலையில் எழுதி கொண்டு இருக்கிறேன். தொடங்கியாகிவிட்டது. முடிந்த வரையில் எழுதி முடித்து விடுகிறேன். பெரியோர்கள் மன்னிக்க!!
1.யமம்:
-------
ஒரு தனி மனிதன் சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும், இருக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து உட் பிரிவுகள் உண்டு. அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சர்யம், தன்னலமின்மை.
முதலாவதாய் அஹிம்சை.
சொல்லாலும் செயலாலும் மற்றவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது. மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துவது, மற்ற உயிர்களை மதித்தல், செடி கொடியாகட்டும், சக உயிர்களாகட்டும் எதற்கும் மதிப்பளிக்கவேண்டும். அதனால்தான் வீடு கட்டும்போது, பூமி பூசை என்று செய்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் உயிர்களை மெல்ல விலக்கி சுத்தம் செய்து, பூமித்தாயிடம் உன்னை வெட்டப் போகிறேன்... அனுமதி கொடு என்று பிரார்த்தித்து பின்னர்தான் துவங்குவார்கள்.
அஹிம்சை என்பது ஆடு கறி தின்று கொண்டே காருண்ய ஒழுக்கம் பேசுவதல்ல.... பாரவண்டியில் மாட்டைப் பூட்டி அதிக பாரம் ஏற்றி பின், மாடு பாவம் என்று போலி கண்ணீர் வடிப்பதில்லை.
தன்னுயிர் போல பிற உயிர்களையும் கருதும் நோக்கு அது தான் அஹிம்சை. ஆனாலும் தன்னை கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் என்கிறது மனு நீதி. தன் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எந்த தர்மமும் நிலைக்காது போலும்.
உடலாலும் மனதாலும் பிறருக்கு தீங்கு வராமல் காப்பதும் அஹிம்சை தான். ஒருவன் நான் யாரையும் அடித்ததில்லை துன்புறுத்தியதில்லை எனலாம். ஆனால் அவன் பேச்சைக் கேட்டு சிலர் மனம் துன்புறுவார்களேயானால் அவன் அஹிம்சையில் இருந்து தவறியவன் ஆகிறான்.
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்கிறது உலகப் பொதுமறை. அஹிம்சைக்கு உதாரணப் புருஷனான காந்தியடிகள் கீதையை ஒப்புக் கொண்டாலும் அதில் போர் மற்றும் வன்முறையை ஒப்புக் கொள்ளவில்லை.
மனதால் நினைப்பது வாக்கில் வந்து செயலாகவும் மாறக் கூடிய சாத்தியம் இருப்பதால் முடிந்த வரை நல்லததையே நினை என்கிறது பதஞ்சலி யோகம்.
பாரதி பாடல்களில் இரு இடங்களில் (இன்னும் பல இடங்களில் இருக்கலாம் நான் படித்தவரையில் சொல்கிறேன்) அருமையாக சொல்லப்பட்டு இருக்கும்.
"... விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிடும் படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் நித்தம்
நவமென சுடர் விடும் உயிர் கேட்டேன்... "
அதாவது விசையொடு பந்தைச் சுவற்றில் எறிந்தால் அது எவ்வளவு வேகமாகச் செல்லுமோ அவ்வளவு வேகமாக செல்லும் உடல் வேண்டும். ஆனால் நசையறு மனம்... ஆசையே இல்லாத மனம் வேண்டும் என்கிறார்..
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்...
[சரி சரி அஹிம்சையை ஆரம்பிச்சி எல்லாரையும் ஹிம்சை பன்றேனோ.... அப்புறமா பாக்கலாமா?!]
தொடரும்...
No comments:
Post a Comment