உலகிற்கு பதஞ்சலி முனிவர் தான் யோக தருமத்தைத் சொல்லித் தந்ததாகவும் அவர் ஆதிசேடனின் அம்சம் என்றும் ஐதீகம். யோக வகுப்புகளில் முதல் மந்திரமே அவரைப் போற்றி தான் ஆரம்பிக்கும். இடுப்புக்கு மேலே மனித உடலும், கீழே ஒரு பாம்பு வடிவ உடலும் கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது. அவர் எழுதிய மூன்று நூல்கள் மிகவும் பிரசித்தம். வாக்கு, மனம், உடல் என மூன்றுக்குமாய் மஹாபாஷ்யம் (இலக்கண நூல்), யோக சாத்திரம், மற்றும் சரகம் எனப்படும் ஆத்திரேய சம்ஹிதை (ஆயுர்வேதம்). இவரைப் பற்றிய செய்திகள் பதஞ்சலி விஜயம் என்ற நூலில் உள்ளதாம். படித்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். எழுதியவர் இராம பத்திர தீக்சிதர்.
பதஞ்சலி முனிவருக்கும் ராமானுஜருக்கும் சற்று தொடர்புடைய கதை கூட உண்டு.
ஆயிரம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதற்காக ஆதிசேடன் அம்சமான இவர் ஆயிரம் தலை கொண்டு திரையின் பின்னால் இருந்து போதித்ததாக ஒரு கதை உண்டு. மாணவர்களை எந்தக் காரணம் கொண்டும் திரையினை விலக்க வேண்டாம் என்று சொல்லி பாடம் தொடர்ந்தவர், ஒரு மாணவன் ஆசிரியர் திரைக்கு பின்னால் என்ன தான் செய்கிறார் என்று திரையை விலக்கியதால் மூச்சுக் காற்றினால் அனைவரும் இறந்து போனார்களாம் ஒரு மாணவன் தவிர. அந்த மாணவனும் பாடத்தை கட் அடித்து வெளியில் சென்றதால் தப்பித்தான் என்று வரும்
அவர் பாம்பு வடிவில் இருந்தாரோ இல்லையோ அது நமக்குத் தேவையில்லை. அவர் சொன்ன கருத்துகள் அற்புதமானவை. எந்த மதத்தினரும் உணர்ந்து செயல்படக் கூடியவை என்பது என் கருத்து.
யோகம் என்பது செயல்- ஆக்ஷன். ஒரு தத்துவமோ அல்லது புத்தகமோ அல்ல. அதாவது yoga என்பதின் வேர் "yuj", to bind together, yoke, union. சமாதி நிலை என்பதும் இதை தான் குறிக்கிறது. [சமாதின்ன உடனே கண்ணம்மா பேட்டை நினைவுக்கு வருதா? அங்க இருக்கிறவங்க மீளாச்சமாதிக்குப் போனவங்க. அந்த சமாதியும் இந்த சமாதியும் ஒண்ணா இருக்குமோ! ஒரு பேச்சு வழக்கு கிராமங்களில் உண்டு- எப்பாவாச்சும் செத்திருந்தா தானே சுடுகாட்டுக்கு போறதெப்படின்னு தெரியும் அப்படின்னு. இரண்டையும் அனுபவச்சிப் பார்த்தா தான் தெரியும் போல.]
அதெல்லாம் இருக்கட்டும், யோகம் என்பது மனிதனின் வாழ்வில் எதற்குத் தேவை என்ற கேள்வி எழும்..
ஒரு ஜென் துறவி வில்வித்தையில் சிறந்தவர். அவரை ஒரு இளைஞன் போட்டிக்கு அழைத்தான். அவனும் சாதாரணமானவன் அல்லன். பல இடங்களில் போட்டியிட்டு முதலிடத்தைப் பிடித்தவன். தன் வித்தையில் அபார நம்பிக்கையுடையவன். தன் திறமையை நிரூபிக்க ஒரு மரத்தில் வெகு சிறிய வட்டம் வரைந்து தூரத்தில் இருந்து அம்பெய்து அதன் மையப் புள்ளியை தைத்தான். அதோடில்லாமல் தைத்த அம்பின் மேல் மற்றொரு அம்பெய்தி அதை சரிபாதியாகப் பிளந்தான். "இதை உங்களால் செய்ய முடியுமா. முடியாதெனும் பட்சத்தில் உங்கள் தோல்வியை இப்போதே ஒப்புக் கொள்ளவேண்டும்"
இதற்கு பதிலிறுக்காத துறவி அவனை ஒரு மலைக்கு தன்னுடன் வருமாறு சொன்னார். சற்று உயரமான ஆடிக் கொண்டிருக்கும் மரத்தில் கிளையின் மேல் நின்று கொண்டு தூரத்தில் இருந்த ஒரு மரத்தை நோக்கி அம்பெய்தார். குறி தவறாமல் அம்பும் மரத்தில் தைத்தது.
கீழிறங்கிய துறவி சொன்னார்
"இப்போது உன்னுடைய முறை"
மரக் கிளையில் ஏறியதும் இவனுக்கு மிகுந்த பயம் ஏற்பட்டுவிட்டது. வில்லின் நுனியைக் கூட தொடவில்லை. வேகமாக கீழே இறங்கிவிட்டான். உடனே துறவி சொன்னார், "உன்னுடைய வில் ஆளுமையில் சிறிதேனும் சந்தேகமில்லை. ஆனால் உன் மனதின் ஆளுமை வருந்தத்தக்கதாக இருக்கிறது. அது உன்கைவசம் வரும்வரை நீ உன்னை சிறந்த வில்லாளன் என்று சொல்லிக் கொள்ளாதே" என்றார்.
தொடரும்...
Tuesday, June 08, 2004
pathanjali yoga suthram - 02
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment