Tuesday, June 08, 2004

pathanjali yoga suthram - 01

முதலில் யோகா என்றால் என்ன?
பெரும்பாலோர் கொண்டுள்ள அபிப்பிராயம் யோக ஆசனம் மற்றும் தியானம் தான் யோகா என்பது. நிறைய இடங்களில் "இவ்விடம் யோகா மற்றும் தியானம் சொல்லித்தரப்படும்" என பலகை வைத்து இருப்பவர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கும். யோகத்தில் தியானம் அடங்கிவிடுகிறது, அப்புறம் என்ன அதை தனியாக சொல்லித்தருவது?

தவிர புத்தகத்தைப் பார்த்தும் வீடியோக்களை பார்த்தும் நானும் யோகா பண்ணுகிறேன் பேர்வழி என்று சிலர் காலைத் தூக்கித் தலையில் வைத்து, பின் என்னமோ செய்து கொண்டு கையும் காலும் பின்னிக்கொண்டு ஒரு புது ஜந்துவாய் காட்சியளிப்பார்கள். அதைப் பிரித்தெடுக்க எத்தனை அவஸ்தைப் படுவார்களோ! அதனால்தான் சில வித்தைகளை குருவின் துணையின்றி கற்கக் கூடாது என்று சொல்வார்கள்.

ஒரு ஜென் கதையும் உண்டு.

ஒரு மாணவன் குருவிடம் சென்றான். அந்த குரு வாள் சண்டையில் நிகரில்லாதவர் எனப் பெயர் பெற்றவர். அவரிடம் வாள்பயிற்சி என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.

"குருவே நான் வாள்பயிற்சி பெறவேண்டும். முழுமையாக வாள்பயில எத்தனை காலமாகும்?"

"பத்துவருடங்கள் ஆகும்!"

"என் தந்தை தனியாக வீட்டுக்காக உழைக்கிறார். நான் அதிக நேரம் செலவழிக்கத் தயாராக உள்ளேன் அப்படியானால் எத்தனை நாளாகும்?"

"இருபது வருடமாகும்."

"தயவு செய்து என் நிலைமையை புரிந்துக் கொள்ளுங்கள். என்னுடைய உழைப்பு வீட்டுக்கு மிக அவசியம். என் தந்தை மிகவும் வயதானவர். அதனால் வாள் பயிற்சிக்கப்புறம் நான் வேலை செய்து என் வீட்டு மக்களைக் காக்க வேண்டும். எவ்வளவு கடினமான உழைப்பு வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். வெகு விரைவில் கற்க வேண்டும். எத்தனை காலமாகும் சொல்லுங்கள்"

சிறிது நேரம் யோசித்த குரு சொன்னார்

"உன்னுடைய பிரச்சினை எனக்குப் புரிகிறது. நீ வாள் பயில குறைந்தது 30 வருடங்களாவது ஆகும்," என்றார்

ஆக எதையும் அவசரத்திலோ தானாகவோ நிர்பந்தத்தாலோ கற்க முயன்றால் அது முழுப் பயனளிக்காது.

மருத்துவம், விற்பயிற்சி மற்றும் யோகம். இவைகளில் எதையும் தானாக கற்றுக்கொண்டு தவறாக முயற்சித்தால் அது பெரும் வினையில் முடியும் ஆபத்து உள்ளது. அத்தனை பயிற்சி தேவை. ஒவ்வொரு பொருளையும் அலசி அப்புறம் இது சரி இது தவறு எனத் தெரிந்து, பின்பு மற்றவர்களுக்கு சொல்லித் தருபவர் ஆசான். ஆயிரம் வேரைக் கொன்றால் அரை வைத்தியன் என்பது பழமொழி. (இதைத் திரித்து சொன்னவர்கள் யாராயிருந்தாலும் அவரை இ.பி. கோ வில் போட வழிதேடுங்கள், என்ன செலவானாலும் பின்னால் பார்க்கலாம்). ஆயிரம் வேர் ஆயிரம் பேர் ஆனதில் ஒரு மருத்துவனுக்கு ஆயிரம் பேரைக் கொல்லும் லைசன்ஸ் தந்து விட்டார்கள்.

[சரி விஷயத்துக்கு வருவோம். இங்கு நான் பதஞ்சலி சூத்திரங்களை தனித் தனியாக சொல்ல வரவில்லை. சொல்லவும் தெரியாது. நான் தமிழில் படித்ததில் புரிந்துகொண்டதை மட்டும் இங்கு தருகிறேன். சரியா தவறா என நீங்கள் தான் சொல்லவேண்டும்..]

தொடரும்...

No comments: