Tuesday, February 01, 2005

kalyaanamaam ... kachchEriyaam... - Sunday

கல்யாணமாம் ... கச்சேரியாம்... - (ஞாயிறு)


******************


காலை 4 மணிவாக்கில் என்னுடைய செல்லிடப் பேசி சற்றே உறுமியது. " கிளம்பிட்டேன்க்கா ... ஆறுமணிக்கெல்லாம் அங்க இருப்பேன் " பிரபாக்காவிடம் சொல்லிவிட்டு வண்டுக்கு போன் செய்தால்... " என்னய்யா இவ்வள சீக்கிறம் ... " வண்டுவிற்கு உறக்கம் கலைய சுப்ரபாதம் பாடி ஆட்டோவை பிடித்து வண்டூவை அழைத்துக் கொண்டு இரயில் நிலையம் சேர்ந்த போது மணி ஆறு.

****
எனக்கு பசிக்குது காலைல இருந்து எதுவும் சாப்டல... வண்டு குடைய ஆரம்பித்ததும் எனக்கும் பசி தெரிந்தது. " மாமிக்கா இட்டிலி கொண்டு வந்தீங்களா "" இல்லைமா... தோசை சுட்டு எடுத்து வந்து இருக்கிறேன் "
" இவ்வள சீக்கிறம் சாப்டல... ஒரு 8 மணிக்கா சாப்டலாம் "
எப்ப எட்டு மணியாகும்னு காத்து கிடந்தோம். எட்டு மணியானவுடன் ஒரு 15 நிமிடத்தில் எடுத்து வந்திருந்த அனைத்து தோசையும் காலியாகி விட்டது

****
கொஞ்சம் பாட்டு, கொஞ்சும் பாட்டு என பாடல்கள் என ஆரம்பித்து சீட்டுக் கச்சேரியில் வந்து முடித்த போது சென்னை வந்து விட்டது. கீழே இறங்கிய உடன் எங்கேயோ பார்த்த ஞாபகம் என்று ஒரு முகம் வந்து வந்து போனது. ஐயப்பன் என்றும் அங்கிருந்து குரல் வர .. சற்றே குழம்பித் தான் போனேன்.. அதற்குள் வண்டூ வந்து இது தான் பாலராஜன் கீதா என்று அறிமுகப் "படு"த்தினார்.
"ஆத்துக்கு போன் போட்டுட்டு வந்துடறேம்மா " என்று கிளம்பிய மாமிக்கா திரும்ப வந்து " ஒரு துக்க விஷயம் நான் புனேக்கு போகனும் " என்ற உடன் அத்தனை நேரமாய் தேக்கி வைத்திருந்த உற்சாகம் எல்லாம் மொத்தமாய் வடிந்து விட்டது.
கண்ணில் நீர்வருவதை கட்டுப் படுத்திக் கொண்டு அவரை வழியனுப்பி விட்டு கணேஷ் பாலராஜனுடனும், நான் அக்காவுடனும் பயணித்தோம்.


****


சாயங்காலம் ஆறு மணிக்குள் ஹரியண்ணா வீட்டுக்கு போகவேண்டும். கிட்ட தட்ட முப்பது மணிக்கும் மேலாக தூக்கமே இல்லாமல் இருந்ததால் தூக்கம் கண்ணைச்சுற்றியது. சற்றே கண்ணயர்ந்து இருந்த போது அக்கா எழுப்பினார்கள். முதலில் எந்த உலகத்தில் இருக்கிறேன் என்ற சந்தேகம் வந்துவிட... மெல்ல மெல்ல தேவருலகத்தில் இருந்து மண்ணுலகம் வந்த பின் தான் சென்னையில் இருப்பது நினைவிற்கு வந்தது.
உஷாம்பிகையை அழைக்க தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிர மாதித்தனாய் பாலராஜன் முயன்றுக் கொண்டிருந்தாலும் அவர் கையிலகப்படாமல் போனது தான் மிச்சம்.
எஸ்.கே வருவதாக இருந்து கடைசி மணித்துளிகளில் வேறு ஏதோ சில காரணங்களால் அவரும் வரவில்லை.


மதுரபாரதி அவர்களை விடாது கருப்பாக பிடித்துக் கொண்டு ஹரியண்ணாவீட்டிற்கு அழைத்து சென்றோம் இதற்கிடையில்
அண்ணாக் கண்ணனுக்கு போன் செய்து வரச் சொன்னால் அவர் எங்களை அவர் அலுவலகத்திற்கு அழைத்தார். தகவல் தொழில் நுட்ப சிறப்பிதழில் உங்களுடைய கட்டுரைகள் இரண்டும் வெளிவந்திருக்கிறது. வந்தால் அதையும் எடுத்துக் கொண்டு உங்களுடனே ஹரியண்ணா வீட்டுக்கு வருகிறேன் என்றார். பாலராஜன் அவர்களின் வாகனத்தில் பயணித்து அங்கு போய் சேர்ந்தோம். கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அங்கிருந்து விட்டு அண்ணாக் கண்ணனையும் அழைத்துக் கொண்டு மறுபடி ஹரியண்ணா வீட்டை வந்தடைந்தோம். வந்தால் அங்கே அக்காவும் தங்கையும் என இருவர் நின்றிருந்தார்கள். பின்பு தான் தெரிந்தது அது நிர்மலாவும் அவரது மகளும் என்று.
*****
சித்திரன், ஹரியண்ணா, மதுர பாரதி, பாகீ , நிர்மலா, ஆர்த்தி,வண்டூ, அண்ணாக் கண்ணன், ஷக்திப்ரபா இவர்களுடன் நான். எத்தனை பெரிய ஆட்கள் இவர்களுக்கு சமமாக நான் அமர்ந்து பேசுவதா என்ற எண்ணத்தால் கொஞ்ச நேரம் நின்று கொண்டு இருந்தேன். ( சும்மா லுல்லுவாங்காட்டிக்கி.... நான் போட்டோ எடுக்க தான் நின்னுட்டு இருந்தேன் ). இளகிய கூட்டம்.. கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியகூட்டமாக உருவெடுக்க ... இலக்கியம் அதிகம் தலையில் ஏறினால் தலைக்கு ஆபத்து என்று பட்டாக் கத்தி பைரவ சுவாமி சொல்லி இருப்பதால் இலக்கியம் பேசும்போது நிர்மலா, ஆர்த்தி , ஷக்தி பிரபா, நான் வெளியே வந்து திருமதி ஹரியண்ணாவிடம் பேசிக் கொண்டே இருந்தோம்.. சில நிமிடங்களில் சித்திரனும் வெளிவந்து விட... " சித்திர(ன்)ம் பேசுதடி " பாடவில்லை தான் ... ஆனால் பேசிக் கொண்டு இருந்தோம்.
********
அப்படி இப்படி பேசிக்கொண்டு இருக்கையிலே மல்லிகைப்பூவை வைத்து சாப்பிடு சாப்பிடு என்றார்கள். எனக்கு தான் கொஞ்சம் தயக்கமாய் இருந்தது . அப்புறம் தான் தெரிந்தது அது இட்டிலி என்று. சும்மா சொல்லக் கூடாது அண்ணியாரின் கைவண்ணம். செய்த பண்டத்தில் அவர்களின் அன்பும் சேர்ந்திருந்ததால் சுவை அதிகமாக கூடி இருந்தது. ( இதில் சில பூரிகள் என் தட்டில் எதிர் பாராத நேரத்தில் விழுந்ததால் திக்கு முக்காடி கஷ்டப் பட்டு சாப்பிட வேண்டியதாயிற்று.).
இத்தனையிலும் ஒரு ஓரத்தில் மாமிக்கா ( ஷைலஜா ) இல்லாதது பெருங்குறையாகவே இருந்தது. எவ்வளவு எவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள்.. மனது இன்னமும் ஆறவில்லை.
********
நிர்மலாவை பாடச் சொல்ல அவரது மகள் சொன்னார். அம்மா ஒரு முறை மேடையில் தோன்றி இருக்கிறார். பாட்டுக் கச்சேரிக்கு.. ஆர்வம் அதிகரிக்க பாடுங்களேன் என்று சொல்ல.. ஆர்த்தி முத்தாய்ப்பாக சொன்னது.. " அம்மா மேடையில் பின்னால் அமர்ந்துக் கொண்டு " டொய்ங்.. டொய்ங் என தம்புரா தான் மீட்டிக் கொண்டு இருந்தார்"
*****
பாடச் சொல்லிக் கேட்டதும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சட்டென்று பாடத்துவங்கினார் அண்ணியார். முதலில் பாடிய குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா... மனதை நிறைத்தது.
அப்புறம் எல்லோரும் பிடிவாதமாக நிர்மலாவை பாடச் சொல்ல அவர்கள் தன் மகளுடன் சேர்ந்து இந்தி பாடல் ஒன்று பாடினார். ஆர்த்தி தனியாக ஒரு ஆங்கிலப் பாடலும் பாடினார். சும்மா சொல்லக் கூடாது. வெகு அருமை. ஆர்த்தி ஒரு வேலை சங்கீதத் துறையில் இறங்கினால் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.
அதற்கடுத்து " ப்ரம்மம் ஒகடே " பாடல் ஆஹா... அண்ணியார் குரலில் தேன் வழிந்தது.

இதற்கிடையில் பா.கீ யும் வண்டுவும் காணவில்லை. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு தருவதற்கு ஒரு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். வண்டு எங்கு போனாலும் ஓரிடத்தில் இருப்பதில்லை. பறந்துக் கொண்டே இருந்தது. அடுத்த முறை அடைத்து (அடக்கி ) வைக்க வேண்டும்.

போட்டோ எடுத்துக் கொண்டும் இடையிடையே ( இடையில் இடையில் .. அய்யய்யோ எப்படி சொன்னாலும் தப்பார்த்தம் பண்ணக் கூடாது.. அதாவது அப்பப்போன்னு சொல்ல வந்தேன் ) கிருக்கு ஒருவேளை வீடு வந்து சேர்ந்திருக்குமோ என அதற்கு போன் செய்ய முயற்சித்தது " நேரவிரயம்".
****


எல்லாம் முடிந்து கிளம்பும் போது வேடிக்கையாக ஹரியண்ணாவிடம் " அண்ணே எல்லாம் சரியா இருக்கா பாத்துக்கோங்க "ன்னு சொல்லப் போக உடனே அவர் எல்லாம் சரியா இருக்கு ஒண்ணு மட்டும் எடுத்துட்டு போறீங்க எல்லாரும் அப்படின்னார்.
திரு வேதநாயகம் பிள்ளை(க்கு ??) எழுதியது தான் நினைவுக்கு வந்தது. கிட்ட தட்ட இரண்டு வருடத்துக்கு முன்பு ஏறக்குறைய அதே அர்த்தம் தொனிக்கும் வகையில் நான் எழுதிய கவிதை .
" ஊர் வந்து சேர்ந்தேன் நண்பா
உளம் வந்து சேரலையே.. எந்தன்
மனமது இல்லை அதனால்
மயக்கங்கள் மிகவாச்சு..
யார் வந்து தரினும் வேண்டேன்...
நீர் வந்து திருப்பி தாரும்"

எதையும் நாம் புதிதாக எழுதுவதில்லை... சங்க காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் எழுதாத கருத்துகள் எதையும் நாம் புதியதாக எழுதப் போவதில்லை என்று மறு நாள் மதுமிதா சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை
*******************

3 comments:

Anonymous said...

ஏதோ கல்யாண நிகழ்ச்சி என்றுப் புரிகிறது. இருப்பினும் முழு விவரங்கள் இருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும். வண்டூ யார்? அவர் படம் இல்லையா?

அண்ணா கண்ணன் ஏன் ரொம்ப நாட்களுக்கு ஒன்றுமே எழுதவில்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

posted by: Dondu

Anonymous said...

இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கலியே என்ற
ஆதங்கம் இன்று
நானும் மல்லிகைப்பூ இட்லி சாப்பிட்டு,
திருமதி அரியின் இனிமையான
பாட்டுக்கள் கேட்டு அத்தனை பேருடனும்
அளவளாவி!

நன்றி நன்றி ஐய்யப்பன்

அன்புடன்
மீனா.

posted by: meena

Anonymous said...

Dear Iyappan,

Blogspot.com could have intimated to you alone that the account is over the bandwidth. I am unable to understand why they insert their message interrupting your text at more than one place - or is there a problem with my brower? I am able to view only Venkatesh' s photograph.

Rgds,
era.mu

posted by: era.murukan