Monday, December 20, 2004

kaathOdu thaan naan pEsuvEn - 3

சரி நாம் நம் இதிகாசத்திற்கு வருவோம்.

ஆள் அகப்படாட்டா தெனாலிராமன் தலைல ஏத்து என்று சொல்வார்கள்... நம்ம சர்தார்ஜி ஜோக் மாதிரி. எதையாவது மக்களிடம் திணிக்க வேண்டும் அது நல்லதோ கெட்டதோ... உடனே புராணங்களின் மேல் அல்லது இதிகாசங்களின் மேல் தூக்கிப் போடுவது வழக்கமாகிவிட்டது. இது போன்று எழுந்த கதைகள் அதிகம். அதில் சில கதைகள் முக்கியமானது அணில் கதை போன்றவை. அணில் உதவப் போய் இராமன் அன்பினால் அதை தடவிக் கொடுத்ததாக ஒரு கதை உண்டு. இந்த கதை வால்மீகி/ கம்ப இராமாயணத்தில் இல்லை. ஒரு நல்ல செய்தி சொல்ல உபயோகிக்கப் பட்ட கதை. சிறு உதவி உன்னால் முடிந்ததை செய். கடவுள் உன் அருகில் இருப்பார். உன்னை அன்புடன் நடத்துவார் என்பது போன்றது. இதை நேரடியாக சொல்லுவதை விட இந்த மாதிரி கதைகளில் ஏற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் இதைக் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ளும் நாம் பாரதத்தில் பாஞ்சாலி வனத்தில் இருந்த போது... முனிவருக்கான பழம் ஒன்றைப் பாண்டவர்கள் மரத்திலிருந்து பறித்து விடுகிறார்கள். அது 12 வருடத்துக்கு ஒரு முறை மட்டும் தான் பழுக்கும்.... அதை மறு படி ஒட்ட வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் தன் மனதில் இருக்கும் இரகசியத்தைச் சொல்ல வேண்டும் என்பதாய்... அதில் திரௌபதி தான் கர்ணனைப் போன்ற வீரன் இல்லாதது குறித்து யோசித்ததாக ஒரு கதை. இதை சீர்தூக்கிப் பார்க்க மறுக்கிறோம். சரி இந்தக் கதையை ஆராய்வதற்கு முன்பு, இதற்கு முந்தைய நிலை என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

எந்த வகையில் கர்ணன் பாண்டவர்களை விட வலிமையானவன் என்று முதன் முதலில் இந்தக் கதை சொன்ன புண்ணியவான்கள் கருதினார்கள் என்று தெரியவில்லை. (அல்லது இந்த கதை திரிக்கப்பட்டு வேறுவிதமாக சொல்லப்படுகிறதா என்றும் தெரியவில்லை)

கர்ணனை ஒரே அடியாக இழிவுபடுத்தவில்லை இதிகாசம். அவனுக்குறிய சில நல்ல குணங்களை எடுத்துக் கூறத் தவறவில்லை. அவன் ஈகை, கருணை என பலவும் சொல்கிறது. ஆனாலும் கர்ணன் பொய் சொல்லி வில் வித்தை கற்றவன். அங்கே ஒழுக்கம் தவறிப்போனது. அடுத்து சுயம்வரத்தில் வில் வளைக்க இயலமால் தோற்றுத் திரும்பியவன். அங்கே வீரமும் போச்சு அது மட்டும் அல்ல, விராட பருவத்தில் அர்ஜுனன் ஒருவனாய் நின்று அனைவரையும் துரத்தி அடித்தான். அதில் கர்ணனும் அடங்குவான். அந்த நேரத்தில் விராட புத்திரன் அனைத்து மன்னர்களின் உடைகளை வெற்றிச்சின்னமாக எடுத்து செல்லுவான். கர்ணன் பாதி யுத்தத்திலேயே களத்தை விட்டு ஓடிப்போகிறான். ஆக விராடன் மகன் எடுத்துச் செல்லும் உடைகளில் கர்ணனின் உடைகள் அடங்காது. ஆக வீரத்தில் இவன் பாண்டவர்களை விட மிகவும் குறைந்தவன்.

பாரதப்போரில் பல முறை தருமனாலும், பீமனாலும் பிழைத்துப் போ... அர்ஜுனன் சபதத்தால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன் என்று அவமானப்படுத்தி அனுப்பப்பட்டவன். அபிமன்யுவின் அத்திரங்களுக்குப் பயந்து தலைதெரிக்க ஓடிய கூட்டத்தில் இவனும் ஒருவன்.

அதையும் தாண்டி, துயில் பிடித்து இழுத்த துச்சனுக்கு உற்சாகமூட்டி மேலும் செய் என்று ஊக்கமளித்தவன். இப்படிப்பட்ட ஒருவனை ஒரு பெண் நினைத்தால் என்று சொன்னால்... எந்த வகையில் சேர்ப்பது? அப்படி பாஞ்சாலி நினைத்து இருந்தால் இன்று பல கோவில்களில் அந்த தெய்வத்திற்கு வழிபாடு இருந்து இருக்காது.

2 comments:

Anonymous said...

இதில் கர்ணன் வீரன் இல்லை என கூறியதை முழுமையாக மறுக்கிறேன்.
வியாசர் கூற்றின் படி,
1.கர்ணன் சுயம்வரத்தில் தோற்கவில்லை.
2. கர்ணன் பொய் சொல்லி வித்தை கற்றதற்கு காரணம் துரோணர் தெய்வீக அஸ்திரங்களை கர்ணனின் பிறப்பைக் காட்டி கற்றுத் தர மறுத்தது.
3.பாரதப் போரில் தருமரால் ஒரு முறையும், பீமனால் ஒரு முறையும் மயக்கமுற்றது உண்மை. ஆனால் இருவரும் பலமுறை கர்ணனிடம் தோற்றது உண்மை.
4.விராட போர் முழுமையான போர் அல்ல.திருட்டு போன்றது
5.கிருஷ்ணர், கடோத்கஜ வதத்திற்குப் பின் அர்ஜுனனிடம் கூறுகிறார்: போரில் கர்ணன் சில சமயம் பின்னடைவு அடைய காரணம் கர்ணனின் அலட்சியமும், எதிரிகளிடம் காட்டும் கருணையுமே. கர்ணன் முனைப்புடன் போரிடும் போது, கர்ணன் கையில் வில் இருக்கும் வரை எவராலும் வீழ்த்த முடியாது.
6.கிருஷ்ணராலும், அர்ஜுனனாலும் வெல்ல முடியாத ஜராசந்தனை சர்வசாதராணமாக இருகூறாக கிழித்தவர் கர்ணன் (பீமசேனரைப் போல் மாற்றிப் போடவில்லை. அதன்பின் ஜராசந்தன் கர்ணனுடன் நட்பு கொண்டான்.)
7.Moreover, wen Krishnar meets Karnan before war. Karnan says that he could not come to Pandava group. But he tells that Pandavas are going to win. "Krishna, you are the deity. Arjun is going to be the priest. Bheeshma, Throna and I are going to be killed by Arjun for you. It is your responsibility to provide heaven for those getting killed in this war"
8. Before Karnan gets killed, he severely injures Arjun and Arjun gets fainted. Before he gets up, Karnan tries to bring up the car and gets killed. Karnan did not try to kill Arjun when he was unconscious.
இன்னும் நிறைய உள்ளன. இவை வியாச பாரதத்தின் அடிப்படையில் ஆனவை

posted by: புலிக்குட்டி

Anonymous said...

"அல்லது இந்த கதை திரிக்கப்பட்டு வேறுவிதமாக சொல்லப்படுகிறதா என்றும் தெரியவில்லை"

முழுக்க உண்மை. இக்கதை திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரால் தெரியுமா? முன்னேறிய வகுப்பினரால். கதையில் கூட கீழ் சாதியை சேர்ந்த கர்ணன் வெல்லக்கூடாது என்று நினைக்கும் கேடு கெட்ட இராசாசி போன்ற இழிந்த மேல்சாதி வெறி பிடித்த அற்பர்களே கர்ணனை இழிவு படுத்தும் வகையில் அவன் அருச்சனனிடம், தருமரிடம், பீமனிடம், அபிமன்யுவிடம், சாத்யகியிடம், மற்றும் அவர்கள் வீட்டு நாய், பன்றி, குரங்கு ஆகியவற்றிடம் தோற்றதாக கதை கட்டுகின்றனர். உண்மை யாதெனில், கர்ணனே இவர்கள் யாவரிலும் மிகச்சிறந்த வீரனாவான். பிதாமகர், குரு துரோணர், கர்ணன் இவர்களே பாரதத்தின் தலை சிறந்த கதாபாத்திரங்கள். அதனால் தான், பாரத யுத்தம், இவர்கள் பெயரில் முன்று பருவங்களாக பிரிக்கப்படுகிறது. கண்ணன் இல்லையென்றால், ஒரு பாண்டவனும் மிஞ்சியிருக்க மாட்டான்.

பாஞ்சாலி ஒன்றும் நல்ல பெண் இல்லை. துரியோதனனை கண்டு நகைத்தது, தனது சுயம்வரத்தில் கர்ணனை சூத புத்திரன் என்று சிறுமைப்படுத்தியது என்று இந்த "தெய்வத்திற்கு" பல நற்சான்று பத்திரங்கள் வாசிக்கலாம். கர்ணன் பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்து குரு சபையில் அவளை அவமானப்படுத்தியது தவறுதான். ஆனால் அதை நினைத்து அவன் வருந்தியது பாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1) பாஞ்சாலி சுயம்வரத்தில் கர்ணன் வில்லை வளைத்தான். ஆனால் கண்ணனின் ஆலோசனையின் பேரில் பாஞ்சாலி அவன் சாதியை கூறி அவனை நிராகரித்தாள். அங்கு எந்த போரும் நடக்கவில்லை
2) கந்தர்வர்கள் கர்ணனை வெல்லவில்லை. குடி மயக்கத்தில் இருந்த கர்ணன் அந்த இடத்தில் இருந்து விலகி தன்னை தயார் செய்து கொண்டு வருவதற்குள் பீமனும் அருச்சனனும் அவனை விடுவிக்கின்றனர்
3) விராட போர் ஒரு போரே அல்ல. சிவபெருமானிடம் இருந்து பெற்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொண்டு அருச்சுனன் அனைவரையும் மயங்க வைக்கிறான். அதோடு அப்போது அவன் நபும்சகனாகவும் இருந்ததால் பிதாமகர், துரோணர், கர்ணன் போன்றவர்கள் தங்கள‌து முழு ஆற்றலுடன் போரிடவில்லை
4) பாரதப்போரில் தான், குரு துரோணர், மற்றும் கர்ணன் ஒரே நேரத்தில் போர் புரிந்தால் நிச்சயம் பாண்டவர்களால் சமாளிக்க முடியாது என்ற காரணத்தினால்தான், பிதாமகர் கர்ணனை தனது தலைமையின் கீழ் போர் புரிய அனுமதிக்கவில்லை.
5) அபிமன்யு அனிந்த கவசம் அருச்சுனன் அவனுக்கு அளித்த சக்தி வாய்ந்த கவசம். துரோணர் அளித்த அந்த மந்திர கவசத்தை அவன் தன் மகனுக்கு அளிக்கிறான். அதன் தன்மை யாதெனில் எதிரிகள் பின்னிருந்து தாக்கினால் மட்டுமே அக்கவசம் அனிந்தவனை வீழ்த்த முடியும். அக்கவசம் இல்லாமல் அபிமன்யுவால் சாகசங்கள் நிகழ்த்தியிருக்க முடியாது.
6) தருமனும் பீமனும் கர்ணனால் தோற்கடிக்கப்பட்டு அவனால் உயிர் பிச்சை பெற்றவர்கள். நீங்கள் கூறியதைபோல அவர்கள் அவனை வெல்லவில்லை. இது முழுக்க முழுக்க மேல் சாதியினரால் திரிக்கப்பட்ட கதை. மேலும் நகுலனும், சாத்யகியும் கர்ணனிடம் படு தோல்வி அடைந்தவர்கள்தான்.
7) அருச்சுனன் கர்ணனிடம் மோதிய முதல் போர் கடோத்கசனின் வதத்திற்கு பிறகுதான். சக்தி கருவி இருந்த வரையில் கண்ணன் அருச்சுனனை கர்ணனிடம் நெருங்க விடவில்லை. முதல் போரில் கர்ணன் வெல்கிறான். அருச்சுனன் கண்ணனாலும் அன்றைய தினம் போர் முடியும் தறுவாயில் இருந்ததாலும் உயிர் பிழைக்கிறான்.

எனது கருத்துகளை தாங்கள் பதிவு செய்தால் தங்களை நேர்மையானவராக ஏற்கிறேன். உங்களுடன் ஆரோக்கியமான முறையில் விவாதம் நடத்தவும் தயாராக உள்ளேன். இல்லையேல், நான் கூறிய சாதி வெறி பிடித்தவராக உங்களையும் நினைத்து என் போக்கில் போகிறேன். உங்கள் விருப்பம்.